குடும்பத்தகராறில் மனைவி அடித்துக்கொலை: தப்பிச் சென்ற கணவனை தேடி வரும் போலீசார்

Author: Udhayakumar Raman
4 September 2021, 3:29 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே குடும்பத்தகராறில் மனைவி அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்துள்ள ஆர்.கோம்பை வடக்கு போயர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி என்கிற லட்சுமி கோயம்புத்தூரில் தங்கி இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு மேத்ரா புனிதா என்ற இரு பெண் குழந்தைகளும் மோனிக்ராஜ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த வாரம் இருவரும் சொந்த ஊரான ஆர்.கோம்பைக்கு வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதலே, பூட்டிக்கிடந்த பெரியசாமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்த அக்கம்பக்கத்தில் உள்ள பொது மக்கள் இதுகுறித்து உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையில் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் விதுன்குமார் சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், புஷ்பவள்ளி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட புஷ்பவள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் குடும்பத்தகராறின் காரணமாக புஷ்பவள்ளி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், கடந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து சொந்த ஊரான கோம்பைக்கு வந்த தம்பதியினரிடையே, தகராறு நடந்ததாகவும், அப்பொழுது புஷ்பவள்ளியின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். மனைவியை கொலை செய்து விட்டு, போர்வையால் மூடி வைத்து , பெரியசாமி வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் 3பிள்ளைகள் பெரியசாமியின் பெற்றோர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

Views: - 130

0

0