காட்டுப்பன்றி கடித்து விவசாயி படுகாயம்

19 December 2020, 3:56 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழி அருகே காட்டுப்பன்றி கடித்து படுகாயமடைந்த விவசாயி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்தப்பகுதியில் கணேசன் என்பவர் தன் மனைவி, இரு மகன்களுடன் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் இருந்த காட்டுப்பன்றி இவரைப் பலமாகத் தாக்கியது. உடனே இவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காட்டுப் பன்றியை விரட்டியடித்தனர்.

மேலும் காயம்பட்ட கணேசனை மீட்ட கிராம மக்கள் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கணேசன் கூறுகையில், காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை அழித்து வருவதோடு மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் விவசாயப் பணிகளை செய்து வரும் விவசாயிகளையும் தாக்கி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் மற்றும் விளைநிலங்களை பாதுகாக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

Views: - 5

0

0