குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

Author: kavin kumar
7 October 2021, 4:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் காஞ்சிபுரம்- வாலாஜாபாத் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஐயன்பேட்டை ஊராட்சியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஐயன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் குழாய்களில் குடிநீர் வராமல் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்த நிலையில்,குடிநீர் வராதது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்து உள்ளனர்.

கிராம மக்களின் புகார் மீது ஊராட்சி நிர்வாகமோ, வட்டார வளர்ச்சி அலுவலரோ, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஆவேசமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் காஞ்சிபுரம் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களின் சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்படும் என தெரிவித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். குடிநீர் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முக்கிய சாலையில் நடத்திய சாலை மறியலால் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களும், பணியிலிருந்து திரும்பிச் செல்லும் தொழிலாளர்களும் பொதுமக்களும் என ஏராளமானவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.

Views: - 123

0

0