நூறு நாள் திட்டத்தில் வேலைகளை வழங்க வலியுறுத்தி பெண்கள் தர்ணா போராட்டம்…

27 August 2020, 7:50 pm
Quick Share

தருமபுரி: அரூரை அடுத்த பறையப்பட்டி புதூர் கிராம ஊராட்சியில் நூறுநாள் திட்டத்தில் வேலைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது பறையப்பட்டி புதூர் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஏரிகள், குளம் குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில், வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் தொழிலாளர்கள் கூறுகையில், நூறுநாள் வேலை திட்டத்தில் நாள்தோறும் 10 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர்.

ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், ஊராட்சி செயலர் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்குவதில்லை,. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரின் தலையீடு காரணமாகவே பெண் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது கரோனா பாதிப்பால் தொழிலாளர்கள் பலர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதால் ஏழை, எளிய குடும்பத்தினர் பாதிக்கின்றனர்.

எனவே, கூடுதல் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பெண் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத்தித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்காத காரணத்தால், பறையப்பட்டி புதூர் ஊராட்சி செயலர் வனிதா, கோபாலபுரம் கிராம ஊராட்சி செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Views: - 28

0

0