தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வேண்டாம்: முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்

23 November 2020, 11:11 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக நாளை மாலை முதல் 25ஆம் தேதி வரை தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

வரும் 25ஆம் தேதி மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இந்த புயலை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர கால செயல் மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமைச்செயலர், காவல்துறை இயக்குனர், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று நிவர் புயலுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி நிவர் புயல் சுமார் 110கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது எனவே மீட்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒரு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படும் என தெரிவித்தார், மேலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள மரங்கள் மற்றும் பதாகைகள் நாளை அகற்றப்படும் என்று கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, தடையின்றி குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைபட்டால் அடுத்த 12 மணி நேரத்தில் சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் புதுச்சேரி தேவையான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாக திருமண மண்டபங்கள் மற்றும் சமூதாய நல கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கடலோரக்காவல் படை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாளை மாலைக்குள் பத்திரமாக திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

நாளை முதல் 25ஆம் தேதி வரை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வியாபார நிறுவனங்களை மூட அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0