இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவவீரர்: குடும்பத்துடன் 100 வது பிறந்தநாள்கொண்டாட்டம்

Author: Udhayakumar Raman
23 June 2021, 2:59 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஓய்வு ராணுவ வீரர் தனது நுாறாவது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார்.

விருதுநகர் என்.ஜி.ஓ.,காலனி கங்கை தெருவை சேர்ந்தவர் நீலமேகம். 1922 ஜூன் 21ல் பிறந்த நீலமேகம் 1941-47 வரை இந்திய ராணுவத்தில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். 1946ல் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் ஜாவா தீவு, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த போரில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக போர்புரிய இந்திய ராணுவம் கடல் வழி பயணம் மேற்கொண்டது. இதில் பங்கேற்ற ராணுவவீரர்களில் இவரும் ஒருவர் 1947க்கு பின் ஓய்வு பெற்ற இவர், தனது சொந்த ஊரான விருதுநகர் வந்து ரேடியோ ரிப்பேர் செய்யும் கடையை நடத்தி வந்தார். வயதான பின் தொழிலை தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நீலமேகம் இந்நிலையில் தனது 99 வயது முடிந்து நுாறாவது பிறந்தநாள் துவங்கியதை யொட்டி தனது 100 வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

நீல மேகத்திற்கு 3 மகன்கள், 2 மகள்கள், 5 பேரன்கள், 4 பேத்திகள், 4 கொள்ளு பேரன்கள், 8 கொள்ளு பேத்திகள் என பெரிய குடும்பமே உள்ளது. தற்போது வரை நல்ல செவி மற்றும் பார்வைத்திறனுடன் சகஜமாக ஆரோக்கியமாக பேசி வருகிறார். நீலமேகம் ஓய்வுக்கு பின் தற்போது ஜீலம் முதல் ஜகார்த்தா வரை என தன் போர்கால அனுபவங்கள் குறித்து சுயசரிதை புத்தகமும் எழுதி வருகிறார். மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு கட்டுப்பாடுகள் அவசியம், ஆரோக்கியம், ஒழுக்கம் என தனிமனிதன் தன்னை முழுமையாக கவனித்து கொள்ளும் போது அவன் ஆயுள் அவனுக்கு வசப்படுகிறது. அனைவரும் தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டாலே நிறைவான வாழ்வு வாழ முடியும் என்கின்றனர் நீலமேகம் குடும்பத்தார்.

Views: - 202

0

0