பல ஆண்டுகளாக நடைபெறும் மணல் கொள்ளை: வீடியோ ஆதாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் புகார்

4 November 2020, 2:06 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடைபெறும் மணல் கொள்ளை குறித்த வீடியோ ஆதாரத்துடன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செல்லக்குமார், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த 29-ம் தேதி திம்மசந்திரம் கிராமத்திற்கு சென்று இருந்தார். அப்போது அங்கு தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான மணல் குவியல்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் துறையினரிடம் விசாரித்தபோது, பல ஆண்டுகளாக ஆற்று மணல் திருடப்பட்டு, தனியார் நிலங்களில் குவியல்களாக சேமித்து வைப்பதும், இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்தப்படுவதும் தெரியவந்தது. பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அங்குள்ள காட்சிகள் அனைத்தையும் செல்போனில் வீடியோ பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டிக்கு இன்று சென்னையில் இருந்து புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதனுடன் தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள வீடியோ ஆதாரத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார். அதில் பல ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கொள்ளை நடப்பது குறித்தும், அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளோடு மாவட்ட நிர்வாகம் கைகோர்த்துள்ளதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இதற்கென தனியாக விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பு ஏற்பட்டுள்ள பல ஆயிரம் ரூபாய் கோடி தொகையை அரசு கஜானாவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 17

0

0