முன்விரோதம் காரணமாக இளைஞர் அடித்து கொலை: நண்பர்கள் 4 பேரிடம் விசாரணை…

Author: kavin kumar
10 August 2021, 1:29 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடியில் முன்விரோதம் காரணமாக நாச்சிகுளத்தை சேர்ந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளந்தை சேர்ந்தவர் இஷ்ரத். இதே பகுதியை சேர்ந்தவர் வாகித். இருவரும் நண்பர்கள். செல் போனில் பப்ஜி கேம் விளையாடியதில் இருவரிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது .  இந்நிலையில் வாகித் தனக்கு புது செல்போன் ஒன்று விலைக்கு வாங்கி தருமாறு இஷ்ரத்திடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னார்குடியில் உள்ள தனது நண்பர் கடையில் போன் வாங்கி தருவதாக இஷ்ரத் தனது பைக்கில் வாகித்தை அழைத்து வந்துள்ளார் . மன்னார்குடிக்கு வந்த இருவரிடையே பழைய பிரச்சனை தொடர்பாக தகராறு நடந்துள்ளது. இதில் வாகித், இஷ்ரத்தை சரமாரி தாக்கினார். பின்னர், நாச்சிக்குளத்தில் உள்ள தனது நண்பர்களான தீன், அப்துல் பாசித், மப்ரூக் ஆகிய மூவரை வரவழைத்த வாகித் மன்னார்குடி ஆர்பி சிவம் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் வைத்து இஷ்ரத்தை மீண்டும் தாக்கினர். 

அப்போது வாகித் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து இஷ்ரத்தை கத்தி மற்றும் பீர் பாட்டிலை உடைத்து   சரமாரியாக குத்தியதில் இஷ்ரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், முருகேசன் ஆகியோர் இஷ்ரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருவாருர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் மன்னார்குடி வந்து சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தினார்.இது தொடர்பாக வாகித் , தீன் , அப்துல் பாசித் , மப்ருக் ஆகிய  நான்கு நபர்களையும் போலீசார் பிடித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பிடிபட்ட நபர்களிடம் டிஎஸ்பி இளஞ்செழியன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.    

Views: - 214

0

0