தஞ்சையில் நள்ளிரவில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

2 March 2021, 3:11 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை ரெட்டி பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தஞ்சை ரெட்டிபாளையம் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டன் மீது முத்துராமன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த வழக்கு அப்படியே நிலுவையில் இருந்து வந்தது. இதையடுத்து முத்துராமன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று வெளியூரில் இருந்து தஞ்சாவூருக்கு வந்தார்.

இந்நிலையில் நள்ளிரவில் மணிகண்டன் மருத்துவக் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ரெட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் வந்த போது முத்துராமன் உள்ளிட்ட சிலர் அங்கு வந்தனர். மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தனர். பின்னர் உடலை ரயில்வே தண்டவாளத்திலும், தலையை அருகே உள்ள கன்னியம்மன் கோவில் முன்பும் வீசிவிட்டு தப்பி ஓடினர்.

தகவலறிந்த மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தனித்தனியாக கிடந்த உடல் மற்றும் தலையை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். தொடர்ந்து ரெட்டிபாளையம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 155

0

0