பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் வெட்டி படுகொலை: போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை

Author: kavin kumar
22 August 2021, 5:29 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு ஊராட்சியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணன் குட்டியம்மாள் தம்பதிகள். இவர்களுக்கு சாந்தகுமார் ,பிரேம்குமார் ,உமேஷ் குமார் என மூன்று மகன்கள் இருந்தனர். மூத்த மகன் சாந்தகுமார் என்பவர் 2012 ஆம் ஆண்டு அதே சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் 11வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த கடைசி மகன் உமேஷ்குமார் என்ற சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் கஞ்சா விற்பனை செய்தது வெளியே தெரியவந்ததால் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாவது மகன் பிரேம் குமார் என்பவர் விப்பேடு பகுதியில் வேறு சமூகத்தை சேர்ந்த சினேகா (வயது 20) என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். சினேகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். பிரேம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். காவல் நிலையங்களில் இவர் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மனைவியிடம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு பெட் மேட்ச் கட்டி வாலிபால் ஆட சென்றவர் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் வெளியே கிளம்பி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதியில் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதாக விடியற்காலையில் தகவல் கிடைத்தது. இன்று அப்பகுதியில் உள்ளவர்கள் சடலத்தை கண்டு அதிர்ச்சியுற்று தாலுகா காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள். காவல்துறையினரின் விசாரணையில், பிரேம்குமார் நேற்று நள்ளிரவு விப்பேடு காலனியில் கண்டம் துண்டமாக தலை, கழுத்து, மார்பு, தொடை உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது.

இந்த படுகொலை பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீப சில ஆண்டுகளாக பிரேம்குமார் கஞ்சா விற்பனை மணல் கடத்தல் அடிதடி போன்ற இவற்றில் ஈடுபட்டு வருவதால் தொழில் போட்டி காரணமாக இவரை வெட்டி படுகொலை செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், பிரேம்குமார் வேறு சமூகத்தை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் , சினேகாவின் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு பிரேம்குமாரை வெட்டி ஆணவப்படுகொலை செய்து இருக்கலாம் என்றும்

சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் பிரபல வழக்கறிஞருமான அருள்நாதன் சம்பந்தப்பட்டுள்ளார், அவருடைய ஆதரவாளர்கள் இந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் கூறுகின்றனர். இதைப் பற்றி காவல்துறையினர் கூறியதாவது, சில நாட்களுக்கு முன்பு செவிலிமேடு பகுதியை சேர்ந்த மணல் கடத்தல் செய்யும் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரேம்குமார் வீட்டில் வந்து தகராறு செய்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இந்தப் படுகொலை நடந்திருக்க வாய்ப்புண்டு என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக மூன்று இளைஞர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

Views: - 227

0

0