பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்..! அமெரிக்கர்களை தொடர்ந்து குறிவைக்கும் தீவிரவாதிகள்..!

15 August 2020, 1:17 pm
Baghdad_Airport_UpdateNews360
Quick Share

மூன்று கத்யுஷா ராக்கெட்டுகள், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியதாக ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நேற்று மாலை நடந்ததாகவும், மூன்று ராக்கெட்டுகள் தென்மேற்கு பாக்தாத்தில் உள்ள அல்-ராத்வானியா பகுதியில் இருந்து வீசப்பட்டதாகவும் ஈராக் கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், உள்துறை அமைச்சக வட்டாரம் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம், ஈராக்கிய இராணுவத் தளத்திற்கு அருகே மூன்று ராக்கெட்டுகள் விமான நிலையத்தின் விளிம்பில் தரையிறங்கியுள்ளன என்றும் அமெரிக்க இராணுவ வல்லுநர்கள், ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் அங்கு ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

ராக்கெட் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் பாக்தாத் விமான நிலையம் மற்றும் ஈராக் இராணுவத் தளங்கள் ஈராக் முழுவதும் அமெரிக்க துருப்புக்களைக் கொண்டுள்ளன. இதனால் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகமும், இதர அமெரிக்க ராணுவ தளங்களும் ராக்கெட் தாக்குதல்களால் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்களில், உள்நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக 5,000’க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளித்து ஆலோசனை வழங்குகின்றனர்.