ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்!!

Author: Udhayakumar Raman
25 August 2021, 7:06 pm
Quick Share

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் உலக நாடுகள் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா சதாத், ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரஞ்ச் நிற உடை அணிந்து முதுகில் உணவு பையுடன் வீடுவீடாக சைக்கிளில் சென்று அவர் உணவு டெலிவரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அந்த புகைப்படத்தை ஜெர்மனியை சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் எடுத்துள்ளார். Al Jazeera Arabia மற்றும் உள்ளூர் ஊடகங்கள் சிலவும் அவர் தொடர்பான புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது. Sky News Arabia செய்தி நிறுவனத்திடம் பேசிய சையது அகமது ஷா சதாத், சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் இருப்பது தாம்தான் என்று உறுதிபடுத்தியுள்ளார்.சையது அகமது ஷா சதாத்தை ஜெர்மன் வீதிகளில் பார்த்து புகைப்படம் எடுத்த அந்த பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தவரை சமீபத்தில் சந்தித்தேன்.

லீப்ஜிக்கில் (ஜெர்மனி நகரம்) என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு Essenஇல் (ஜெர்மனி நகரம்) உணவு டெலிவரி செய்து விட்டு Lieferandoக்கு(உணவு டெலிவரி செய்யும் நிறுவனம்) சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2018ஆம் ஆண்டு சையது அகமது ஷா சதாத் சேர்க்கப்பட்டார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் ஜெர்மனிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்றதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் உணவு டெலிவரி செய்யும் பணி பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 301

0

0