ஆப்கனில் இருந்தால் உசுரு தப்பாது… விமான நிலையத்தில் முண்டியடித்த கூட்டம்…!! விமான சேவை தற்காலிக ரத்து (வீடியோ)

Author: Babu Lakshmanan
16 August 2021, 11:43 am
Afghanistan_UpdateNews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து வெளியே நினைத்த மக்கள் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் புகுந்தது. தலிபான்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் பணத்தை வாரி இரைத்தது. 2011ம் ஆண்டு 1,10,000 துருப்புகள் வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா களமிறக்கியிருந்தது. பின்னர் படிப்படியாக, தங்கள் நாட்டு துருப்புகளை அமெரிக்கா குறைத்தது.

குறிப்பாக, செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படைகளையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இதனைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகரங்களாக தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

Afghanistan_UpdateNews360

இந்த நிலையில், நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில், ஆப்கன் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், உயிர் பலி அச்சத்தால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆப்கன் நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். பேருந்துகளில் ஃபுட் போர்டு அடிப்பது போல, விமானங்களில் முந்தியடித்துக் கொண்டு மக்கள் ஏறும் காட்சிகள் உலக நாடுகளையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், அலைமோதும் கூட்டத்தினால், விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் மீண்டும் நிலைமை கட்டுக்குள் வர உலக நாடுகளின் உதவியையே அந்நாட்டு மக்களும், தலைவர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

Views: - 377

0

0