600’க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ..! அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களை வாரிச் சுருட்டும் நெருப்பு..! என்ன காரணம்..?

10 September 2020, 5:44 pm
California_Forest_Fire_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அமெரிக்கா இதுவரை மோசமான பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஆரம்பித்து ஆகஸ்ட் வரை கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவுவது வழக்கமான ஒன்றாகும்.

இது சில சமயங்களில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் பரவி மக்களை இடம்பெயரச் செய்யும் சூழ்நிலையை உருவாக்கும்.
ஆனால் இந்தமுறை ஏற்பட்டுள்ள காட்டுத் தீ இதுவரை இல்லாத அளவில் அமெரிக்காவின் மேற்குப் பகுதி முழுவதும் பரவி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக கலிபோர்னியாவில் ஏற்படும் காட்டுத் தீ இந்த ஆண்டு ஒரேகான் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவியுள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் சாதாரணமாக ஆரம்பித்த காட்டுத் தீ, ஒரு வாரத்திற்கு முன் வேகமெடுக்க ஆரம்பித்து தற்போது கலிபோர்னியா தாண்டி ஒரேகான் மற்றும் வாஷிங்டனிலும் தீவிரமாக பரவி வருகிறது.

இதில் கலிபோர்னியாவில் மட்டும் 75% காட்டுப் பகுதியும், 40% மக்கள் வசிக்கும் பகுதியும் காட்டுத் தீயால் மிகவும் கோரமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெளியான ஒரு அறிக்கையின் படி, 95 இடங்களில் தீ இன்னும் செயல்பாட்டில் உள்ளது தெரிய வந்துள்ளது. இது தினம் தினம் தொடருவதால், ஒட்டுமொத்தமாக சுமார் 600’க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 

இந்த காட்டுத் தீயின் காரணமாக கலிபோர்னியாவில் சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு 600 கட்டிடங்களும், 120 வீடுகளும் கூட சேதமடைந்துள்ளன.

இதே போல் ஓரேகான் பகுதியில் 2 லட்சம் ஏக்கம் நிலப்பரப்பும், வாஷிங்டனில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் சேதமடைந்துள்ளது. மேலும் காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுமார் 25,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள மாகாணங்களில் இருந்தும் கூட தீயணைப்பு வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும் தீ கட்டுப்படுத்தப்பட முடியாமல் கொழுந்து விட்டு எரிகிறது.

சமீபத்தில் அமெரிக்கா 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வெப்பநிலையை எதிர்கொண்டிருந்தது. இந்த மூன்று மாகாணங்களிலும் கடந்த மாதத்தில் இருந்த அதிகபட்ச வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவே இந்த காட்டுத்  தீ ஏற்பட்டுள்ளதாக, சூழலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீக்களில் மிக மோசமான ஒன்றாக உள்ள இது, அருகில் உள்ள மாகாணங்களுக்கு பரவி பாதிப்பை இன்னும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

Views: - 8

0

0