மோதலுக்கு மத்தியில் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா..! என்ன காரணம்..?

14 September 2020, 7:53 pm
Terry_Branstad_USA_UpdateNews360
Quick Share

சீனாவுக்கான அமெரிக்க தூதர் டெர்ரி பிரான்ஸ்டாட் பதவி விலகுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளதன் மத்தியில் பாம்பியோவின் ட்வீட்டுகள் வந்தன.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 73 வயதான பிரான்ஸ்டாட் சேவைக்கு நன்றி தெரிவித்த பாம்பியோ, அமெரிக்க-சீன உறவுகளை மறுசீரமைக்க பங்களித்திருப்பதாகக் கூறினார். மேலும் இது ஆசிய-பசிபிக் பகுதியில் பல தசாப்தங்களாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நீடித்த, நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாம்பியோ கூறினார்.

தூதர் வெளியேறியதன் காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. குறிப்பாக, பிரான்ஸ்டாட்டின் ராஜினாமா குறித்த அறிவிப்பு கிடைக்கவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அயோவாவின் முன்னாள் கவர்னரான டெர்ரி பிரான்ஸ்டாட், மே 2017 முதல் சீனாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், சிஎன்என் செய்தி வலையமைப்பு பெயரிடப்படாத ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பிரான்ஸ்டாட் வெளியேற வாய்ப்புள்ளது என்று முன்னரே கூறியது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள், பிராந்திய உரிமைகோரல்கள், வர்த்தகம், கொரோனா தொற்றுநோய் மற்றும் ஹாங்காங்கில் அமைதியின்மை ஆகியவை அதிகரித்த நிலையில் இந்த ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 8

0

0