இந்தியரின் பெருமை பேசும் அமெரிக்கா: மேலும் ஒரு காந்தி சிலை திறப்பு..!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 9:23 am
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசுசிப்பி மாகாணத்தில் உள்ள கிளார்க்ஸ்டேல் நகரில் மஹாத்மா காந்தியின் வெண்கல சிலை நேற்று நிறுவப்பட்டது. இது அமெரிக்காவில் நிறுவப்படும் 2வது காந்தி சிலை ஆகும்.

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர், பீப்பிள் ஷோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு போன்ற சிக்கல்களில், இந்த நகரம் சிக்கி இருந்தது. இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

இதன் காரணமாக அந்த நகரம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய கலாசார கவுன்சில் சார்பில், மஹாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது.

சிற்பி ராம் சுதார் என்பவர் இந்த சிலையை வடிவமைத்துள்ளார்.இந்த சிலை திறப்பு விழா, கிளார்க்ஸ்டேல் நகரில் நேற்று நடைபெற்றது. கிளார்க்ஸ்டேல் நகர மேயர் சக் எஸ்பி சிலையை திறந்து வைத்து பேசியதாவது,

mahatma_gandhi_updatenews360

இந்திய கலாசார கவுன்சில் அளித்த இந்த பரிசால் நாங்கள் பெருமை அடைகிறோம். ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, அஹிம்சை, உண்மை, உறுதி, எளிமையின் வாயிலாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பெருந்தலைவர் மஹாத்மா காந்தி.

மார்டின் லுாதர் கிங் ஜூனியர் உட்பட பல உலக தலைவர்கள் காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என அவர் உரையாற்றினார். அமெரிக்காவின் பல நகரங்களில் ஏற்கனவே மகாத்மா காந்திக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 597

0

0