சீனாவில் 2வது உள்நாட்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்: பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி..!!

6 February 2021, 5:20 pm
sinovak - updatenews360
Quick Share

பீஜிங்: சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் அரசுக்கு சொந்தமான சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது 2வது உள்நாட்டு தடுப்பூசி மருந்தான கொரோனாவாக் தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்தவும், சில நிபந்தனைகளுடன் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினோவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவாக் தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்திறன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, முதற்கட்டமாக அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கொரோனாவாக் தடுப்பூசி சேர்க்கப்பட்டு தொற்று ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளில் மருந்தின் செயல் திறன் மற்றும் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவாக் தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த சீனாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளில் நடைபெற்ற 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளை சினோவாக் நிறுவனம் இன்னும் வெளியிடாத நிலையில், பிரேசில், இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0