இந்திய ராணுவத் தளபதிக்கு நேபாளத்தின் கௌரவ ராணுவத் தலைவர் பட்டம் வழங்கியது நேபாள அரசு..!

5 November 2020, 8:02 pm
Indian_Army_Chief_General_M_M_Naravane_Updatenews360
Quick Share

இந்திய இராணுவத் தளபதி எம்.எம்.நாரவனேவுக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று வழங்கினார். இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில், இரண்டு ராணுவங்களுக்கிடையேயான வலுவான உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் பழமையான பாரம்பரியத்தின் அடிப்படையில் இது வழங்கப்பட்டது.

நேபாள இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெனரல் நாரவனேவுக்கு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஷிட்டல்நிவாஸில் நடைபெற்ற விழாவின் போது ஜனாதிபதி ஒரு வாள், சின்னம் மற்றும் ஒப்புதல் உத்தரவு சான்றிதழ் வழங்கினார் எனத் தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இந்திய தூதர் வினய்.எம்.குவத்ரா மற்றும் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 1950’ல் தொடங்கிய இந்த பாரம்பரியம் இரு ராணுவங்களுக்கும் இடையிலான வலுவான உறவை பிரதிபலிக்கிறது.

1950’ஆம் ஆண்டில் முதன்முதலாக நேபாள கௌரவ ராணுவத் தளபதி பட்டம் பெற்ற முதல் இந்திய ராணுவத் தலைவர் எனும் சிறப்பை ஜெனரல் கே.எம்.கரியப்பா பெற்றார். கடந்த ஆண்டு ஜனவரியில், நேபாள ராணுவத் தலைவர் ஜெனரல் பூர்ணா சந்திரா தபாவும் இந்திய ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பட்டத்தை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடமிருந்து பெற்றார்.

“இந்த நீண்டகால பாரம்பரியம் நேபாளம் மற்றும் இந்தியாவின் தேசியப் படைகளுக்கு இடையிலான நெருக்கமான உறவுகளின் அடையாளமாகும்” என்று நேபாள ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

விழாவுக்குப் பிறகு, ஜெனரல் நாரவனே ஜனாதிபதி பண்டாரியை அழைத்து, அவருக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நன்றி தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர் என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Views: - 24

0

0