பலுசிஸ்தான் ஆர்வலர் கனடாவில் மர்ம மரணம்..! பாகிஸ்தான் உளவுத்துறையின் சதியா..?

22 December 2020, 2:54 pm
karima_baloch_updatenews360
Quick Share

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு பலுசிஸ்தானில் மேற்கொள்ளும் அட்டூழியங்கள் குறித்து குரல் கொடுத்த கரீமா பலோச் என்ற ஆர்வலர், கனடாவின் டொராண்டோவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று பலுசிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கரீமா ஒரு கனேடிய அகதியாக இருந்தார். மேலும் பிபிசியால் 2016’ஆம் ஆண்டில் உலகின் 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக அழைக்கப்பட்டார்.

முன்னதாக, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்தார். கடைசியாக அதே நாளில் மாலை 3 மணியளவில் அவரைக் கண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து டொரொன்டோ காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் உதவியைக் கோரியிருந்தனர். இருப்பினும், தற்போது கரீமாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பலுசிஸ்தானில் பிரபலமான ஆளுமைகளில் ஒருவரான கரீமா பலூச், அங்குள்ள பெண் செயற்பாட்டாளர்களின் முன்னோடி என்று நம்பப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் நடந்த ஐக்கிய நாடுகளின் அமர்வுகளில் பலுசிஸ்தான் பிரச்சினையையும் அவர் எழுப்பியுள்ளார்.

மே 2019’இல் ஒரு நேர்காணலில், பாகிஸ்தான் தங்கள் வளங்களை பறித்து, மக்களை தங்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பலுசிஸ்தான் போஸ்ட், கரீமாவின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, கடும் கவலையையும் எழுப்பியுள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பலோச் தலைவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது இது முதல் முறை அல்ல. கடந்த மே மாதம், பலோச் பத்திரிகையாளர் சஜித் உசேன் சுவீடனில் இறந்து கிடந்தார். அவர் மார்ச் 2 முதல் உப்சாலா நகரில் இருந்து காணமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்து மரணங்களிலும் பாகிஸ்தான் உளவுத்துறைஇருப்பதாக நம்பப்படுகிறது. வெளிநாட்டில் தங்களுக்கு எதிராக செயல்படும் முக்கிய தலைவர்களை முடக்கும் வகையில், பாகிஸ்தான் இதை செய்து வருவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0