இதை செய்யாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு..! பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை..!

22 September 2020, 8:32 pm
Borris-Updatenews360
Quick Share

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கூட்டங்களுக்கு தடைகள் மற்றும் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உத்தரவு ஆகியவை அடங்கும்.

இதன் மூலம் இங்கிலாந்து இரண்டாவது ஊரடங்கை எதிர்கொள்கிறது. மேலும் இது அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், நாடு முழுவதும் நோய்த்தொற்றுகளின் வீதம் விரைவான வேகத்தில் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து ஒரு அபாயகரமான நிலையை அடைந்துள்ளது என்றார். இதன் மூலம் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் என அவர் கூறினார்.

இதையடுத்து முகக்கவசத்திற்கான தேவைகளை விரிவுபடுத்துவதோடு, பப்கள், பார்கள் மற்றும் உணவகங்களுக்கான நேரக்கட்டுப்பாடு மூலம் முழு தேசிய ஊரடங்கை தவிர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“எங்கள் இளைஞர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறந்த நிலையில் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.” என அவர் மேலும் கூறினார்

இருப்பினும், நோயை அடக்குவதற்கு நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமீபத்திய கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் அதிக கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை நோக்கி நகர வேண்டிய தேவை ஏற்படும் என்று போரிஸ் ஜான்சன் எச்சரித்தார்.