மலை.. அண்ணாமலை… 410 நாடுகளின் கரன்ஸி வைத்திருக்கும் சாதனை தமிழன்!

Author: Poorni
12 January 2021, 12:43 pm
Quick Share

உலகத்தில், 410 நாடுகள் வெளியிட்ட, ரூபாய் நோட்டுகள் மற்றும் 50 நாடுகள் வெளியிட்ட 500 நாணயங்களை சேகரித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் நமது தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை.

சென்னையை சேர்ந்தவர் அண்ணாமலை ராஜேந்திரன் (வயது 34) ஐடி ஊழியரான இவருக்கு, பல்வேறு நாடுகளின் கரன்ஸி நோட்டுகளை சேகரிக்கும் ஆர்வம் ஏற்பட அதனை சேகரிக்க துவங்கி உள்ளார். முதலாம் உலகப்போருக்கு முன்பிருந்தது முதல் தற்போது வரையிலான, 410 நாடுகளில் புழக்கத்தில் இருந்த, கரன்ஸி நோட்டுகளை கடந்த 10 ஆண்டுகளாக அண்ணாமலை சேகரித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு, லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 29 விளையாட்டுகளை நினைவுபடுத்தும் விதமாக, 29 இங்கிலாந்து நாணயங்கள் வெளியிடப்பட்டன. அந்த நாணயங்களையும் அண்ணாமலை சேகரித்து வைத்துள்ளார்.

இது ஒரு புதிய சாதனை. ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இவரது சாதனையை அங்கீகரித்து அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி உள்ளது. இதற்கு முன், 2016 ஆம் ஆண்டில், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு வாலிபர், 378 நாடுகளில் உள்ள கரன்ஸி நோட்டுகளைச் சேகரித்து, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.

410 நாடுகள் வெளியிட்ட ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரது சாதனையை அண்ணாமலை தற்போது முறியடித்துள்ளார். சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பார்வையிட்ட நடுவர்கள், அவரது சாதனையை அங்கீகரித்ததை அடுத்து, ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகத்தில் அண்ணாமலை பெயர் இடம் பிடித்துள்ளது. இந்த சாதனை தமிழருக்கு நமது வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

Views: - 40

0

0