“தைவான் தேசிய தினத்தை புறக்கணியுங்கள்”..! இந்திய ஊடகங்களை மிரட்டுகிறதா சீனா..?

8 October 2020, 7:21 pm
Taiwan_National_Day_UpdateNews360
Quick Share

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 1962’க்குப் பின் எப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தாலும், தொடர்ந்து அடாவடியில் ஈடுபடும் சீனா இந்திய ஊடகங்களுக்கு, தைவான் தேசிய தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறு ஆலோசனை கூறியுள்ளது.

“இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதை எங்கள் ஊடக நண்பர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறது. தைவான் சீனாவின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். இந்த உண்மைகள் ஐ.நா. தீர்மானத்தால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் உலகளாவிய ஒருமித்த கருத்தாகும்.” என்று சீனா தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

தைவானின் தேசிய தினத்திற்காக சில செய்தித் தாள்கள் விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து சீனா இந்தியாவில் செய்தித் தணிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

அதன் ஒரே சீனா கொள்கையை பயன்படுத்தி, சீனா தைவானை ஒரு நாடு என்று கூட குறிப்பிடக்கூடாது என்று கூறியது.

“தைவான் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்திய ஊடகங்கள் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம், ஒரே சீனா எனும் கொள்கையை மீற வேண்டாம். குறிப்பாக, தைவானை நாடு அல்லது சீனக் குடியரசு என்றோ, சீனாவின் தைவான் பிராந்தியத்தின் தலைவரை ஜனாதிபதி என்றோ குறிப்பிடக்கூடாது. அவ்வாறு குறிப்பிட்டு பொது மக்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பக்கூடாது.” என சீன தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் தேசிய தினம் 2020 வரும் அக்டோபர் 10’ஆம் தேதி வரவுள்ள நிலையில் சீனா இந்திய ஊடகங்களுக்கு உத்தரவிடும் வகையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் தைவானின் வெளியுறவு அமைச்சகம் சீன தூதரக ஆலோசனையை கண்டித்துள்ளது.

“இந்தியா ஒரு துடிப்பான பத்திரிகை சுதந்திரத்தை விரும்பும் மக்களைக் கொண்ட பூமியில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் கம்யூனிஸ்ட் சீனா தணிக்கை விதித்து துணைக் கண்டத்திற்குள் அணிவகுத்துச் செல்வதாக நம்புவது போல் தெரிகிறது. தைவானின் இந்திய நண்பர்களிடம் இதற்கு ஒரே பதில் தான்: தொலைந்து போங்கள்!” என தைவானிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

சீனக் குடியரசு என அழைக்கப்படும் தைவான் தலைவர் சாய் இங்-வென், அதன் தேசிய தினத்தைக் கொண்டாடுவதில் அனைவரையும் தைவானுடன் சேருமாறு அழைத்தார். 

“உலகெங்கிலும் இருந்து எங்களுக்கு கிடைத்த தைவான் தேசிய தின வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி. இந்த நாளில், நம் நாட்டின் கடின உழைப்பு சுதந்திரங்களையும் ஜனநாயக சாதனைகளையும் கொண்டாடுகிறோம். எங்களுடன் சேர நாங்கள் உங்களை அழைக்கிறோம், நீங்களும் தைவானைப் பற்றி பெருமிதம் கொள்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்திய செய்தித்தாள்களில் விளம்பரங்கள் சாயின் புகைப்படத்துடன் வெளியாகின. அதில் சக ஜனநாயக நாடான இந்தியா தைவானின் இயற்கையான நட்பு நாடு என்று புகழப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 36

0

0