லடாக் மோதலில் சீன வீரர்கள் உயிரிழப்புக்கு காரணம் ராணுவத்தின் ஊழலே..! கருத்து வெளியிட்ட சீனருக்கு நேர்ந்த கதி தெரியுமா..?

8 August 2020, 11:46 am
China_Flag_UpdateNews360
Quick Share

இந்திய எல்லைப் படையினருடனான மோதலின் போது சீன வீரர்கள் இறந்ததற்கு, இராணுவ வாகனங்களின் தரம் மற்றும் ஊழல் தான் காரணம் என ஒரு சீன குடிமகன் ஆன்லைன் வதந்திகளை பரப்பியதாக சீன போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன ராணுவத்தின் ஆங்கில இணையதளத்தில் இது தொடர்பாக வெளியான கட்டுரையில், சந்தேகத்திற்குரிய நபர் ஜாவ் லியிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் டாங்ஃபெங் ஆஃப்-ரோட் வாகன தயாரிப்பு நிறுவனம் மோசமான வாகனங்களை வழங்கியதே சீன வீரர்களின் இறப்புக்குக் காரணம் எனக் கூறியிருந்தார்.

அதே சமயத்தில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலின் தேதி அல்லது இடம் குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

“சமீபத்தில், ஜாவ் என்ற பெயர் கொண்ட நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் டோங்ஃபெங் ஆஃப்-ரோட் வாகன தயாரிப்பு நிறுவனம் வழங்கிய இராணுவ வாகனங்களின் மோசமான தரம் காரணமாக சீனா-இந்தியா எல்லை மோதலின் போது சீன வீரர்களின் மரணத்திற்கு டோங்ஃபெங் காரணமாக அமைந்துள்ளது என வதந்திகளை பரப்பினார்.” என்று eng.chinamil.com.cn’இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15 அன்று கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே நடந்த மோதலில், இந்தியா 20 வீரர்களை இழந்தது. இந்த போராட்டத்தில் சீனா எத்தனை வீரர்களை இழந்தது என்பதை இன்னும் வெளியிடவில்லை.

ஆகஸ்ட் 3’ம் தேதி, ஆன்லைன் பயனர் ஜாவ் தனது வி சாட் சமூக ஊடக கணக்கில் வதந்திகளை வெளியிட்டதாக இணையம் வழியாக அறிந்து கொண்டபின், டோங்ஃபெங் நிறுவனம் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு அறிக்கை அளித்து, வழக்கை விசாரித்து சரிபார்க்க ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தது என்று ராணுவ வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4’ஆம் தேதி மாலை சுமார் ஆறு மணியளவில், ஜாவ்வை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவர் வதந்தி பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளார் எனக் கூறி அந்த கடிதமும் சீன ராணுவ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஒப்புதல் வாக்குமூலக் கடிதத்தில், ஆகஸ்ட் 2 மாலையில் குடித்துவிட்டு மது போதையில் இந்த வதந்தியை பரப்பியதாக ஜாவ் தெரிவித்துள்ளார்.