அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை…!!

15 November 2020, 11:07 am
us - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய போது இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகியுள்ளார். அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த டொனால்டு டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையில் ஒருபுறம் ஜோ பைடனின் வெற்றியை ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் உறுதியான பிறகும், இது போன்ற போராட்டங்களும், பேரணிகளும் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர், ‘வாக்குகளை திருடுவதை நிறுத்துங்கள்’, ‘இன்னும் நான்கு ஆண்டுகள்’, ‘நாங்கள் டிரம்பை விரும்புகிறோம்’என்பன போன்ற பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Trump - Updatenews360

இந்நிலையில் மாலை நேரத்திற்கு பிறகு இந்த மோதல் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையின் போது இளைஞர் ஒருவருக்கு முதுகில் கத்தி குத்து விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 21

0

0