100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு..!!

17 January 2021, 9:30 am
Joe_Biden_UpdateNews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.‌ அங்கு இந்த வைரஸ் 2 கோடியே 35 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கியதோடு 3 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்தார். முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் கொரோனா வைரசை ஜனாதிபதி டிரம்பை விட சிறப்பாக கையாண்டு நாட்டை அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுப்பேன் என்ற வாக்குறுதியின் மூலமே தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வருகிற 20ம் தேதி பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக டெலாவேர் தனது குழுவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்கள் முடிவில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இலக்கை அடைய உதவும் 5 விஷயங்கள். 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமா என்கிற சந்தேகம் பலரிடமும் உள்ளது.

ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன் எங்களால் அதை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் தைரியத்துடனும் உறுதியுடனும் அவற்றைப் பின்தொடர, பெரிய இலக்குகளை நிர்ணயிக்கும் நேரம் இது. ஏனென்றால் தேசத்தின் ஆரோக்கியம் உண்மையில் ஆபத்தில் உள்ளது.

முதலாவதாக அதிக முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க உடனடியாக மாகாணங்களுடன் இணைந்து செயல்படுவோம். தற்போது நடைமுறையில் இருக்கும் தடுப்பூசி போடும் செயல்முறை தோல்வியடைந்த ஒன்றாக உள்ளது. நீங்கள் இன்று பெரும்பாலானவர்களிடம் கேட்டால் யார் தடுப்பூசி போடுகிறார்கள் என்பதை அவர்களால் சொல்ல முடியாது. அவர்களுக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் நாடு முழுவதும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படாமல் பல்லாயிரக்கணக்கான கொரோனோ தடுப்பூசிகள் உள்ளன.

அதே நேரத்தில் தடுப்பூசி தேவைப்படும் நபர்கள் அதை பெற முடியவில்லை. எனவே நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் இந்த நிலையை மாற்றுவோம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் எங்களது நிர்வாகம் மிகவும் வெளிப்படை தன்மையாக இருக்கும்.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

Views: - 0

0

0