மீண்டும் கொரோனா யுத்தம்…! அமெரிக்காவுடன் மோதும் சீனா

Author: Udayaraman
23 July 2021, 10:04 pm
Quick Share

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது, கொரோனா விவகாரத்தில் சீனாவிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்.சீனாவின் உகான் நகர வைராலஜி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது என்று குற்றம் சாட்டியதுடன் அதை சீன வைரஸ் என்றே அவர் குறிப்பிடவும் செய்தார். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் உகான் நகர ஆய்வகங்களில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் டிரம்ப் அப்போது வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

முதலில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் பின்னர் ஒப்புக்கொண்டது. ஆனால் அது எந்த அளவிற்கு உலக சுகாதார நிறுவனம் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தது என்று தெரியவில்லை.விசாரணையின் முடிவுகளில் உகான் நகர ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என்று தெரியவந்தது.எனினும் அமெரிக்காவுக்கும் அதன் ஆதரவாளர்களான இங்கிலாந்து, பிரான்ஸ்,ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுக்கு இந்த விசாரணை முடிவுகளின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார்.அவர் சீன ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டு இருந்ததால் சீன அரசுக்கு இணக்கமாக நட்புறவை மேற்கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக முன்னாள் அதிபர் டிரம்ப்பை போலவே ஜோ பைடனும், சீனாவின் வாழ்நாள் அதிபர் ஜின்பிங்குடன் கொரோனா தொற்று பரவல் விஷயத்தில் நேரடி மோதலை தொடங்கிவிட்டார்.

இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோமிடம் உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்றை அமைத்து மறு விசாரணை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுக்க தொடங்கியது. ஏற்கனவே, தான் அமைத்த முதல் விசாரணைக்குழுவின் அறிக்கையில் திருப்தியடையாத உலக சுகாதார நிறுவனம், கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழு சீனாவின் ஆய்வகங்களில் மீண்டும் சோதனை நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆனால்,இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. “உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் திட்டம் அறிவுக்கு எதிரான அவமரியாதை. அறிவியலை நோக்கிய முரட்டுத்தனம். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. எனவே சீனா அதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது” என்று அந்நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சர் ஷெங் யிசின் மறுத்திருக்கிறார். இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் மறுப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சீனா இந்தப் பிரச்சினையில்பொறுப்பற்ற ஆபத்தான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

சீனாவிடம் கொரோனா தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு கூடங்களின் மாதிரிகளையும் உலக நாடுகள் கேட்டு வலியுறுத்தும். இதுபற்றி முழுமையான விசாரணை நடந்தால்தான் உலகில் இன்னொரு பேரிடர் வருவதை தடுக்க முடியும். எனவே உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவு நியாயமானதே” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பதுதான். அமெரிக்காவில் ஜூலை 22-ந் தேதி ஒரே நாளில் 61ஆயிரத்து 651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 365 பேர் ஒரே நாளில் பலியாகி இருக்கிறார்கள்.

தற்போது அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முந்தைய வைரசை விட இதன் பரவும் தன்மை ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது என்கிறார்கள். நோய் எதிர்ப்புசக்தி உள்ளவர்களைக் கூட டெல்டா வைரஸ் அதிகமாக பாதிக்குமாம். தற்போது இது குழந்தைகளிடமும் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை பிரேசில்,இந்தோனேசியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தீவிரமடைந்து இருக்கிறது. குறிப்பாக பிரேசில் நாட்டில் ஜூலை 22-ந்தேதி ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 1500 பேர் வரை 24 மணி நேரத்தில் பலியாகியிருக்கிறார்கள். இந்தோனேசியாவில் அதே நாளில் 49,500 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அன்று மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1450.

கொரோனா தொற்றால் ஒன்றரை வருடத்தில் உலகம் முழுவதும் 19 கோடியே 35 லட்சத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 கோடியே 58 லட்சத்து பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 41 லட்சத்து 52 ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கியிருக்கிறது.1 கோடியே 35 லட்சம் பேர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். உலகின் பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளாக முதல் இரு இடங்களில் அமெரிக்காவும், சீனாவும் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே கொரோனா அமெரிக்காவை தொடர்ந்து உலுக்கி வருவதால் திடீர் சரிவுக்கு உள்ளான அதன் பொருளாதாரம் இன்னும் எழவே
இல்லை.

அதேபோல் இதர வல்லரசு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மூன்றும் கூட கொரோனாவின் பெரும் பாதிப்பால் மோசமான பொருளாதார சீர்குலைவை சந்தித்திருக்கின்றன. அவையும் சட்டென்று பொருளாதார எழுச்சி கண்டு விடமுடியாது.கொரோனா தொற்று எந்த நாட்டிலிருந்து பரவியதோ அந்த நாடு உடனடியாக பொருளாதார சரிவிலிருந்து மீண்டு விட்டது. அதாவது சீனாவுக்கு பொருளாதார பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு. ஆனால் அமெரிக்காவோ இன்னும் தட்டுத் தடுமாறுகிறது. இதே நிலை இன்னும் 7,8 ஆண்டுகளுக்கு நீடித்தால் சீனாவின் கை ஓங்கி முதலிடத்துக்கு அது வந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

தற்போது பன்னாட்டு நிதியத்தின் மதிப்பீட்டின்படி அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 20.5 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவின் வளர்ச்சி 13.5 ட்ரில்லியன் டாலர்களாகும். அதேநேரம் 2024-ல் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 25.3 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும். அப்போது சீனாவின் வளர்ச்சி 20.6 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவை விட சீனா வேகமாக பொருளாதார வளர்ச்சி காணும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 140 உலக நாடுகளுக்கு 33 லட்சம் கோடி ரூபாயை சீனா கடனாக கொடுத்துள்ளது. பல நாடுகளால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்பதால் அந்த நாடுகளின் பிடி சீனாவின் கைகளுக்குள் சென்றுவிடும். இதனால்தான் சீனாவை ஆதிக்கம் செலுத்த விடாமல் முடக்குவதற்கு அமெரிக்கா விரும்புகிறது. ஆண்டுக்கு ஆண்டு பொருளாதாரத்தில் வலுவடைந்து கொண்டே வரும் சீனாவோ, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உலகையே தன் கைக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் செயல்படுகிறது. எனவேதான் கொரோனா பிரச்சினையை கையில் எடுத்து சீனாவின் கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்ட அமெரிக்கா நினைக்கிறது. இந்த நீயா, நானா? போட்டி கொரோனாவுக்கு முடிவு கட்டும் வரை நீடிக்கும் என்பது நிச்சயம்!

Views: - 303

0

0