பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம்..! போலீசாரை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

19 April 2021, 8:21 pm
Pakistan_TLP_Police_clashes_UpdateNews360
Quick Share

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரிக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக நடக்கும் வன்முறை மோதல்களுக்கு மத்தியில், இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியினர் லாகூரில் உள்ள அதன் தலைமையகத்தில் ஆறு பாதுகாப்புப் படையினரை பிணைக் கைதிகளாகக் கொண்டு சென்றதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தனர். இதனால் கடுமையான உள்நாட்டுப் போர் போன்ற சூழல் பாகிஸ்தானில் நிலவி வருகிறது.

நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரிக்கும் கார்ட்டூன்கள் பிரான்சில் வெளியிடப்பட்டது தொடர்பாக பிரெஞ்சு தூதரை வெளியேற்ற தெஹ்ரிக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (டி.எல்.பி) குழு ஏப்ரல் 20’ம் தேதி காலக்கெடுவை இம்ரான் கான் அரசுக்கு வழங்கியிருந்தது. 
ஆனால் இம்ரான் கான் அரசு டிஎல்பி கட்சியின் தலைவரை கைது செய்ததால், அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் மற்றும் வன்முறையைத் தொடங்கினர்.

இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்றும்  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உண்மையில் 150 பேருக்கும் மேல் மரணமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் வன்முறையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். வன்முறைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசு டிஎல்பி கட்சியை தடை செய்தது.

இந்நிலையில், டிஎல்பி ஆதரவாளர்களால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஆறு பேரில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் இரண்டு துணை ராணுவத்தினர் அடங்குவதாக லாகூர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் ராணா தெரிவித்தார்.

“டி.எல்.பி ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் கொண்ட இரண்டு எரிபொருள் டேங்கர்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசுகிறார்கள். இதன் விளைவாக 11 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.” என்று ராணா கூறினார்.

கடந்த வாரம் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் செய்தி சேனல்கள் இந்த குழு தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று மொபைல் மற்றும் இணைய சேவைகள் மோதல்கள் நடைபெறும் பகுதியில் தடை செய்யப்பட்டது.

இருப்பினும், டி.எல்.பி ஆதரவாளர்கள் நேற்று போலீசாருடன் நடத்திய மோதல்கள் என்று அவர்கள் கூறிய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த குழுவை ஆதரிக்கும் ஹேஷ்டேக்குகள் நேற்று பாகிஸ்தானில் பிரபலமாக இருந்தன.

இதனால் பாகிஸ்தானில் தொடர்ந்து உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

Views: - 112

0

0