பங்களாதேஷ் மசூதி ஏர் கண்டிஷனர் விபத்து..! பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!

6 September 2020, 5:00 pm
Victims_Releatives_of_Bangaladesh_Mosque_AC_Explosive_Updatenews360
Quick Share

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள ஒரு மசூதியில் ஏர் கண்டிஷனர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24’ஆக உயர்ந்தது. மேலும் மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டாக்காவின் நாராயன்கஞ்சில் உள்ள பைத்துல் சலாத் மசூதியில் வெள்ளிக்கிழமை மாலை தொழுகையின் போது நிலத்தடி குழாய் ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் ஆறு ஏர் கண்டிஷனர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்தன.

குண்டுவெடிப்பில் நேற்று இரவு 11 மணி வரை 21 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் டாக்காவைச் சேர்ந்த ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் மருத்துவர்களை மேற்கோள் காட்டி மேலும் மூன்று பாதிக்கப்பட்டவர்கள் இன்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த 24 பேரில் ஏழு வயது சிறுவனும் ஒருவர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தங்கள் உயிருக்கு போராடுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

கசிந்த குழாயிலிருந்து எரிவாயு வெளியேறி தீப்பொறி தூண்டப்பட்டதாகவும், மசூதியின் தரை தளத்தில் உள்ள ஆறு ஏர் கண்டிஷனர்களும் வெடித்ததாகவும் தீயணைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

டைட்டாஸ் எரிவாயு பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவனம் லிமிடெட் நிறுவனத்திடம் எரிவாயு குழாய் கசிந்ததாக மசூதி குழு சமீபத்தில் புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் டைட்டாஸ் எரிவாயு அதிகாரிகள் 50,000 டாக்கா லஞ்சம் கேட்டதாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். லஞ்சம் வழங்கப்படாததால், இந்த பேரழிவிற்கு காரணமான விஷயத்தை அதிகாரிகள் புறக்கணித்ததாக டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நாராயன்கஞ்ச் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு சேவை, டைட்டாஸ் எரிவாயு பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவனம் லிமிடெட் மற்றும் டாக்கா மின் விநியோக நிறுவனம் (டிபிடிசி) ஆகிய நான்கு தனித்தனி ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ சேவைகளையும் உறுதி செய்ய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Views: - 5

0

0