ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு..! பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு..!

9 May 2021, 1:11 pm
afghanistan_bomb_blast_school_updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தான் தலைநகரில் ஒரு பெண்கள் பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பலர் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நேற்று நடந்த இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 100’க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்தார்.

பள்ளி நுழைவாயிலுக்கு வெளியே நடந்த மூன்று குண்டு வெடிப்புகள் மாணவர்கள் அன்றைய தினம் பள்ளியை விட்டு கிளம்பும்போது தாக்கியது என்றார். தலைநகரின் மேற்கில் பெரும்பாலும் ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் வசிக்கும் நிலையில், அந்த பகுதியிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள தலிபான்கள் தாங்கள் இதை மேற்கொள்ளவிலை என மறுத்தனர்.

முதல் குண்டு வெடிப்பு வெடிபொருட்களால் நிரம்பிய வாகனத்திலிருந்து வந்தது. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. இறப்பு புள்ளிவிவரங்கள் இன்னும் உயரக்கூடும் என்று அரியன் கூறினார்.

குண்டுவெடிப்பு முடிந்த உடனேயே, ஆத்திரமடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதுடன், காயமடைந்தவர்களை வெளியேற்ற முயன்றபோது சுகாதார ஊழியர்களை கூட அடித்ததாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குலாம் தஸ்திகர் நசரி தெரிவித்தார். ஆம்புலன்ஸ் குண்டுவெடிப்பு தளத்தை அணுக அனுமதிக்குமாறு குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இடைவிடாத குண்டுவெடிப்புகளால் தலைநகரில் நேற்றைய சூழல் மிக மோசமானதாக மாறியது. யு.எஸ் மற்றும் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி இராணுவ விலகலை நிறைவு செய்வதால் பாதுகாப்பு இல்லாத சூழல் மற்றும் இன்னும் அதிகமான வன்முறைகள் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

குண்டுவெடிப்பு நடந்த மேற்கு டாஷ்-இ-பார்ச்சி சுற்றுப்புறத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானின் ஹசாரஸை இந்த தாக்குதல் குறிவைத்தது. பெரும்பாலான ஹசாராக்கள் ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஆவர். இந்த பகுதி சிறுபான்மை ஷியாக்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் பெரும்பாலும் நாட்டில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் அதிக தாக்குதலுக்கு உள்ளாகிறது. எனினும் நேற்றைய குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

இதே பகுதியில் சிறுபான்மை ஷியாக்களுக்கு எதிரான தாக்குதல்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு முன்பு நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு 50 பேர் கொல்லப்பட்ட கல்வி நிலையம் மீதான தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் மேற்கொண்டது. அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கம் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, அது குறிப்பாக ஷியா முஸ்லீம்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு எதிராக தனது தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

Views: - 208

0

0