அமெரிக்காவில் வெப்பநிலை 54.4 டிகிரி செல்சியஸ்..! 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டும் வெப்பம்..!

18 August 2020, 10:32 am
Death_Valley_UpdateNews360
Quick Share

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள டெத் வேலியின் வெப்பநிலை 100 ஆண்டுகளில் மிக உயர்ந்த உலக வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. அமெரிக்க தேசிய வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெத் பள்ளத்தாக்கில் 130 டிகிரி பாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) ஆக வெப்பநிலை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மிக அதிகமாக உள்ளது.

டெத் வேலி வெப்பநிலை குறித்து லாஸ் வேகாஸில் உள்ள தேசிய வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது 1913 ஜூலை முதல் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.” எனத் தெரிவித்துள்ளது.

லாஸ் வேகாஸில் உள்ள தேசிய வானிலை அமைப்பு, தானியங்கி கண்காணிப்பு அமைப்பை டெத் வேலியில் இதற்காக நிறுவியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அங்கு வெப்பநிலை கணிசமாக அதிகரித்து வருகிறது என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மிக உச்சபட்ச வெப்பநிலை பதிவு, அதன் முக்கியத்துவம் காரணமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர், இது ஒரு முறையான மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தேசிய வானிலை அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெவாடாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஃபர்னஸ் க்ரீக் பார்வையாளர்கள் மையத்திற்கு அருகிலுள்ள தேசிய வானிலை சேவையின் தானியங்கி வானிலை நிலையம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:41 மணிக்கு மிக உயர்ந்த அளவை எட்டியது.

டெத் வேலி என்பது கிழக்கு கலிபோர்னியாவில், வடக்கு மொஜாவே பாலைவனத்தில், கிரேட் பேசின் பாலைவனத்தின் எல்லையில் உள்ள ஒரு பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். இது மத்திய கிழக்கு மற்றும் சஹாராவில் உள்ள பாலைவனங்களுடன் பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும்.

ஜூலை 10, 1913 பிற்பகலில், யுனைடெட் ஸ்டேட்ஸ் வானிலை பணியகம் டெத் வேலியின் ஃபர்னஸ் க்ரீக்கில் 134 °F (56.7 °C) வெப்பநிலையை பதிவு செய்திருந்தது. இது பூமியின் மேற்பரப்பில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த சுற்றுப்புற வெப்பநிலையாக உள்ளது.

ஆகஸ்ட் 16, 2020 அன்று, ஃபர்னஸ் க்ரீக்கில் உள்ள அமெரிக்க தேசிய வானிலை அமைப்பின் தானியங்கி வானிலை நிலையத்தில் 130 °F (54.4 °C) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இது உறுதிப்படுத்தப்பட்டால், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிகபட்ச வெப்பநிலையாக இது இருக்கும்.

Views: - 42

0

0