சீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு கலந்த குடிநீர் விநியோகம்: ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!

17 January 2021, 8:46 am
unsafe water - updatenews360
Quick Share

பெய்ஜிங்: சீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சீனாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் நச்சு கலந்த ரசாயன பொருட்களுடன் கூடிய குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி சிங்குவா பல்கலை கழகத்தினை சேர்ந்த குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில்,

துணிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட கூடிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலிபுளூரோஅல்கைல்ஸ் என்ற ரசாயன பொருட்களின் பாதுகாப்பு அளவு பற்றி கணக்கிடப்பட்டது. அவற்றில், 20 சதவீதத்திற்கும் கூடுதலான சீன நகரங்களில் பாதுகாப்பு அளவை கடந்து இந்த வகை ரசாயன கலக்கப்படுகிறது என தெரிய வந்துள்ளது.

சீனாவில் தேசிய பாதுகாப்பு தர நிர்ணயங்கள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க ஒழுங்குமுறைகள் அளவுகோலாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, கிழக்கு சீனாவின் வூக்சி, ஹேங்ஜவ் மற்றும் சுஜவ் நகரங்களிலும், குவாங்டாங் மாகாணத்தின் போஷான் நகரங்களிலும் அதிகளவு ரசாயன கலப்புகள் உள்ளன.

சீனாவின் வடக்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் இந்த வகை ரசாயன பொருட்களின் அடர்த்தி அதிகம் காணப்படுகிறது. இதற்கு தீவிர தொழிற்சாலை நடவடிக்கைகள் மற்றும் அதிக மக்கள் தொகை நெருக்கம் ஆகியவை காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த ரசாயன பொருட்கள் மற்றவற்றை விட அதிக ஆபத்து நிறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. இவை மனித உடலிலோ அல்லது சுற்று சூழலிலோ கூட உடைபடாத தன்மை கொண்டது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த ரசாயன பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் பெரிய அளவிலான சவால்களை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் சீனாவும் குடிநீரை சுத்தம் செய்து, தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாட்டில் இருந்து வெளிவரும் ரசாயன பொருட்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆய்வாளர் ரோலண்ட் வெபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 0

0

0