தேர்தல் முறைகேடெல்லாம் கிடையாது..! டிரம்ப் மனுவை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்..!

22 November 2020, 11:06 am
Donald_Trump_UpdateNews360
Quick Share

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் மில்லியன் கணக்கான வாக்குகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரக் குழு பென்சில்வேனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3’ஆம் தேதி நடந்தது. தேர்தல் முடிந்ததும் அன்றே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வழக்கமாக ஒரு நாளில் முடிவடையும் வாக்கு எண்ணிக்கை கொரோனா காரணமாக மிகவும் தாமதமாகவே வெளியாகியது.

இறுதியில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, ஆரம்பத்தில் டிரம்ப் முன்னணியில் இருந்த இடங்களில் தற்காலிக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் மற்றும் பல இடங்களில் வெற்றி தோல்விக்கு இடையில் குறைந்த வாக்கு வித்தியாசம் ஆகியவை டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் மாகாணங்களில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி டிரம்ப் பிரச்சாரக் குழு, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில் ஒன்றான பென்சில்வேனியாவில், தற்போது நீதிபதி மத்தேயு பிரான் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். இது டிரம்புக்கு மிகப்பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தனக்கு தொந்தரவு செய்யும் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக குற்றம் சாட்டிய நீதிபதி பிரான், டிரம்ப் பிரச்சாரக் குழு, தகுதி மற்றும் சாட்சியங்கள் எதுவும் இல்லாத ஊக அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் மூலம் மட்டுமேவாதங்களை முன்வைத்தது என்று கூறி இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.

இந்நிலையில் இதே போல் மற்ற மாகாணங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிலும் பாதகமான முடிவு வந்தால், அமெரிக்காவில் அதிகார மாற்றம் சுமூகமாக நடக்குமா எனும் கேள்வி அமெரிக்க மக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 25

0

0