12வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை! கேட்ச் பிடித்து காப்பாற்றிய டெலிவரி டிரைவர்

4 March 2021, 8:11 am
Quick Share

வியட்னாமில், 12வது மாடியில் இருந்து 2 வயது குழந்தை ஒன்று தவறி விழ, டெலிவரி செய்ய வந்த டிரைவர், குழந்தையை தரையில் விழ விடாமல், அற்புதமாக கேட்ச் பிடித்து குழந்தையின் உயிரை காப்பாற்றி உள்ளனர். நெட்டிசன்கள் அவரை ஹீரோ என புகழ்ந்து வருகின்றனர்.

வியட்னாமில் உள்ளது ஹனோய் நகரம். இங்குள்ள பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் உள்ள பால்கனியில், 2 வயது நிரம்பிய குழந்தை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. அப்போது அப்பகுதிக்கு டெலிவரி செய்ய வந்த டிரைவரான இன்குயன் என்காக் மான்ம் என்ற 31 வயது இளைஞர், சிறுமி கூக்குரலிட்டு அழுவதை கேட்டார். கனநேரத்தில் முடிவெடுத்த அவர், குழந்தை எங்கு விழும் என கணக்கிட்டு அந்த கூரையின் மேல் ஏறி கொண்டார்.

சில நொடிகளில் 164 அடி உயரத்திலிருந்து குழந்தை விழுந்து விட்டது. தனது கையால் கேட்ச் பிடித்த அவர், உயிரை காப்பாற்றி விட்டோம் என குழந்தையை கட்டி பிடித்து மகிழந்திருக்கிறார். அப்போது குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ந்திருக்கிறார். உடனடியாக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையின் இடுப்பெலும்பு இடம்பெயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தெரிவித்த இன்குயன், ‘‘சம்பவம் நடந்தபோது நான் அதிகம் யோசிக்கவில்லை. அங்க இருப்பது என் மகள் போல நினைத்து கொண்டு அவசரமாக காப்பாற்ற முயன்றேன். ஒரு நிமிடத்திற்குள் அனைத்தும் முடிந்தது. உயிரை காப்பாற்றியதில் மகிழ்ச்சி. என் வாழ்க்கை தற்போது மாறிவிட்டது. பலரும் என்னை ஆன்லைனில் பாராட்டுவதை காண்கிறேன்’’ என மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த வீடியோ அந்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக மக்கள் அவரை ஹீரோ என புகழ்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 3

0

0