லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை..! ஒரு பள்ளி முதல்வரால் சாத்தியமானது எப்படி..!

By: Sekar
14 October 2020, 12:19 pm
Libiya_Indians_Tabassum_Mansoor_UpdateNews360
Quick Share

செப்டம்பர் மாதம் போரினால் பாதிக்கப்பட்ட லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்திய பிரஜைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

லிபியாவில் உள்ள அல் ஷோலா அல் மூடியா எரிசக்தி நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர்கள் அனைவரும் செப்டம்பர் 13’ஆம் தேதி இந்தியாவுக்கு திரும்ப திரிபோலியில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டனர். அஸ்வெரிஃப் எனும் பகுதியில் அவர்கள் கடத்தப்பட்டனர். பின்னர் அக்டோபர் 11 அன்று அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டவர்களின் விடுதலையைப் பாதுகாப்பதில் பெங்காசியில் உள்ள இந்திய சர்வதேச பள்ளியின் (ஐஐஎஸ்) முதல்வர் தபஸம் மன்சூர் முக்கிய பங்கு வகித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பிறந்த தபஸம் மன்சூர் கடந்த 40 ஆண்டுகளாக லிபியாவில் தங்கியுள்ளார்.

லிபியாவில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லவும் 59 வயதான தபஸம் மன்சூரை துனிசியாவிற்கான இந்திய தூதர் புனீத் ராய் குண்டால் நியமித்திருந்தார். குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவுக்கு இப்போது திரிபோலியில் தூதர் யாரும் இல்லை.

லிபிய அதிகாரிகள் மற்றும் பழங்குடி பெரியவர்களின் உதவியுடன் போராளிகளுடன் பல நாட்கள் நீடித்த பதட்டமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தபஸம் மன்சூர் ஏழு இந்தியர்களையும் விடுதலை செய்து மீட்க முடிந்தது.

லிபியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு தபஸம் மன்சூர் உதவுவது இது முதல் முறை அல்ல. 2011’இல் கடாபி சார்பு மற்றும் கடாபி எதிர்ப்பு சக்திகளுக்கு இடையிலான சண்டையின் போது, பெங்காசியில் சிக்கித் தவித்த 3,000 இந்தியர்களை வெளியேற்றுவதற்கும் அவர் உதவியுள்ளார்.

கடத்தலில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது விடுவிக்கப்பட்ட ஏழு இந்தியர்கள் பீகார், ஆந்திரா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடத்தல்காரர்கள் இந்தியர்களை அல் ஷோலா அல் மூடியா நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.

ஒரு அறிக்கையில், மத்திய வெளியுறவு அமைச்சகம், “அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். தற்போது அவர்கள் ப்ரேகாவில் உள்ள நிறுவனத்தின் வளாகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதற்கு தேவையான நடைமுறைகளை முடிக்க முயற்சிக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டினரின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைத்தமைக்காக லிபிய அதிகாரிகள் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடி தலைவர்களுக்கும் மத்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது.

“துனிசியாவிற்கான எங்கள் தூதர் மற்றும் எங்கள் உள்ளூர் தூதரக ஊழியர்கள் அவர்களுடனும் நிறுவனத்துடனும் நெருக்கடியான நிலையில் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 41

0

0