45 பேருக்கு கொரோனா பரப்பிய தமிழர் கைது..! சிவகங்கை கிளஸ்டர் என பெயர் வைத்த மலேசியா..!
13 August 2020, 8:21 pmமலேசியாவில் ஹோட்டல் தொழில் நடத்தி வரும் சிவகங்கையைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா கொரோனா, அந்நாட்டின் கெடா மாநிலத்தில் கொரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், வீட்டு தனிமைப்படுத்தலை மீறியதற்காக 12,000 மலேஷியா ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நிசார் பாட்சா, கெடா மாநிலத்தில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார். கொரோனா சமயத்தில் இந்தியாவில் இருந்த அவர், ஜூலை மாத தொடக்கத்தில், சிவகங்கையிலிருந்து மலேசியா திரும்பினார். இந்நிலையில் மலேசிய விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஆரம்பத்தில் தொற்று இல்லை எனக் கூறப்பட்டது.
எனினும் அவர் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் தனிமையில் வைக்கப்பட்டார். அவருக்கு சிவகங்கா கிளஸ்டர் எனும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் விதிகளை மீறினார்.
கொரோனா விதிகளை மீறி வெளியில் நடமாடியதால், இவர் மூலம் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நிசார், அலோர் செட்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் அவர் இன்னும் சிறைக்கு அனுப்பப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, குற்றம் சாட்டப்பட்டவர் ஜூலை 14 ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 4.40 மணி வரை பொது வங்கி, வேளாண் வங்கி, மற்றும் ஜித்ராவில் உள்ள வங்கி ரக்யாத் மற்றும் உள்நாட்டு வருவாய் சேவை மையம் குபாங் பாசுவில் வருவாய் வாரியம் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988’இன் பிரிவு 15(1)’இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ஜித்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி மொகத் ஹாடி ஹக்கிமி ஹருன், இன்று நிசாருக்கு தண்டனையை வழங்கினார்.
அதில் 5 மாத சிறைத் தண்டனையும், இந்திய மதிப்பில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை முடிந்த பின் அவர் சிறையிலடைக்கப்படுவார் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்