கர்தார்பூர் குருத்வாராவில் சீக்கியர்களின் உரிமையைப் பறித்த பாகிஸ்தான்..! இந்தியா கடும் கண்டனம்..!

5 November 2020, 2:51 pm
gurdwara_kartarpur_sahib_updatenews360
Quick Share

குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பின் நிர்வாகத்தையும் பராமரிப்பையும் பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டியிலிருந்து (பி.எஸ்.ஜி.பி.சி) பிடுங்கி சீக்கியரல்லாத அமைப்புக்கு மாற்றிய பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) பாகிஸ்தானின் ஒருதலைப்பட்ச முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா, சீக்கிய சமயத்தைத்  தோற்றுவித்த குரு நானக் வாழ்ந்து மறைந்த இடம் என்பதால் சீக்கியர்களின் புனித தளங்களில் ஒன்றாக இது போற்றப்படுகிறது.

16’ஆம் நூற்றாண்டில் குருநானக் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் புனித குருத்வாராவுக்கு இந்திய யாத்ரீகர்கள் விசா இல்லாத வருகையை அனுமதிக்கும் வகையில் கர்தார்பூர் நடைபாதையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 2019’ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்ட பின்னர் இந்தியர்கள் விசா இல்லாமல் கர்தார்பூர் சென்று வருகின்றனர். 

சீக்கியர்களின் இந்த புனித குருத்வாரா, தற்போது பாகிஸ்தான் சீக்கிய அறக்கட்டளையான பி.எஸ்.ஜி.பி.சி.’இடமிருந்து பிடுங்கி சீக்கியரல்லாத எவாக்யூ அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது சீக்கியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த எவாக்யூ அறக்கட்டளை என்பது 1947’ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்கு தப்பி வந்த சிறுபான்மையினரின் சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும். 

பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

“புனித குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பின் நிர்வாகத்தையும் பராமரிப்பையும் பி.எஸ்.ஜி.பி.சி எனும் சிறுபான்மை சீக்கிய கூட்டுறவு நிறுவனத்தால் நடத்தப்படும் அமைப்பிடமிருந்து மாற்றி சீக்கியரல்லாத ஒரு அமைப்பான எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவது பற்றிய செய்திகளை நாங்கள் கண்டோம். 

பாகிஸ்தானின் இந்த ஒருதலைப்பட்ச முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் கர்தார்பூர் சாஹிப்புக்கு எதிராகவும், சீக்கிய சமூகத்தின் மத உணர்வுகளுக்கும் எதிராகவும் இந்த நடவடிக்கை உள்ளது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இத்தகைய நடவடிக்கைகள் பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் யதார்த்தத்தையும், மத சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் பற்றிய அதன் தலைமையின் கூற்றுக்களையும் மட்டுமே அம்பலப்படுத்துகின்றன.” என வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 25

0

0