மியான்மரில் அரங்கேறும் ராணுவ வன்முறை: ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம்…!!

3 April 2021, 8:58 am
myanmar - updatenews360
Quick Share

புதுடெல்லி: மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான மியான்மரில் உள்நாட்டு போர் உச்ச நிலையை எட்டியுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களாக, மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது, உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஆங் சாங் சூகி வெற்றிப் பெற்றார். இந்நிலையில், நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி, அந்நாட்டு ரானுவம் ஆட்சியை கலைக்க முற்பட்டு வருகிறது. மேலும், ஆங் சாங் சூகியை வீட்டுக் காவலில் வைத்துள்ளதோடு, மீண்டும் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் என மியான்மர் ராணுவம் கூறி வருகிறது.

இதனிடையே, ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கும் மியான்மர் மக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அப்புறப்படுத்தி வருகிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு, அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மரில் நடைபெறும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்ச்சி கூறியதாவது,

மியான்மரில் நிகழ்த்தப்படும் ராணுவத்தின் வன்முறைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலைத்து ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. தற்போது அங்கு நிலவும் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசியான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சமமான, ஆக்கபூா்வமான முறையில் பங்களிக்கும் முயற்சியாக சா்வதேச நாடுகளுடனும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடா்பில் இருந்து வருகிறது என்றார்.

Views: - 83

0

0