சமஸ்கிருதத்தில் பதவியேற்ற நியூசிலாந்தின் இந்திய எம்பி டாக்டர் கௌரவ் சர்மா..!

25 November 2020, 6:12 pm
Dr_Gaurav_Sharma_UpdateNews360
Quick Share

நியூசிலாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்களில் ஒருவரான டாக்டர் கௌரவ் சர்மா, இன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த 33 வயதான சர்மா, சமீபத்தில் நியூசிலாந்தில் ஹாமில்டன் வெஸ்டுக்கான தொழிலாளர் கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூசிலாந்து மற்றும் சமோவாவுக்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேஷி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரி மொழியில் சர்மா முதன்முதலில் பதவியேற்றார் என்றும், பின்னர் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் பதவியற்றார் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்தியா மற்றும் நியூசிலாந்து கலாச்சார மரபுகளுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுவதாக பர்தேஷி மேலும் தெரிவித்தார்.

ஆக்லாந்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் வாஷிங்டனில் எம்.பி.ஏ படித்துள்ள சர்மா, ஹாமில்டனின் நாவ்டனில் பொது பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் முன்னர் நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, நேபாளம், வியட்நாம், மங்கோலியா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பொது சுகாதாரம், கொள்கை, மருத்துவம் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியில் ஏன் பதவிப் பிரமாணம் செய்யவில்லை என்று கேட்ட ட்விட்டர் பயனருக்கு பதிலளித்த சர்மா, அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது கடினம் என்றும் எனவே அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை செலுத்துவதால் சமஸ்கிருதத்தை தேர்வு செய்ததாகக் கூறினார்.

முன்னதாக 2017’ல் நடந்த தேர்தலில் தோல்வியுற்ற சர்மா, இந்த ஆண்டு தேசிய கட்சியின் டிம் மசிண்டோவை தோற்கடித்தார். மற்ற நாடுகளைப் போலவே தற்போது நியூசிலாந்திலும் இந்தியர்கள் அரசில் அதிகம் கோலோச்சுவது சமீப காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0