2 ஆண்டுகளுக்குள் நான்காவது முறையாக கவிழ்ந்தது அரசு..! என்ன நடக்கிறது இஸ்ரேலில்..?

24 December 2020, 7:42 pm
Benjamin_Netanyahu_UpdateNews360
Quick Share

நாட்டின் வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவிற்குள் பட்ஜெட்டை நிறைவேற்ற நாட்டின் நாடாளுமன்றம் தவறியதை அடுத்து இஸ்ரேலிய அரசாங்கம் கவிழ்ந்தது.

இதன் மூலம் இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 23 அன்று தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது கூட்டணிக் கட்சியான ப்ளூ அண்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகியோர் தங்களது ஏழு மாதகால அரசாங்கத்தின் சரிவுக்கு ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டியுள்ளனர்

“ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அசல் கூட்டணி ஒப்பந்தத்தை மாற்றுவதற்காக ஒப்பந்தங்களிலிருந்து விலகியதுடன், கொரோனா நெருக்கடியின் போது தேவையற்ற தேர்தல்களுக்கு எங்களை இழுத்துச் சென்றது” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். 

“நாங்கள் ஒரு தேர்தலை விரும்பவில்லை. அதற்கு எதிராக நாங்கள் வாக்களித்தோம். ஆனால் நாங்கள் தேர்தல்களுக்கு பயப்படவில்லை. ஏனென்றால் தேர்தல் நடந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்!” என அவர் மேலும் கூறினார்.

நெதன்யாகு எதிர்கொள்ளும் ஊழல் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிடும் பென்னி காண்ட்ஸ், “பிரதமர் தனது ஊழல் தொடர்பான விசாரணையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்குப் பதிலாக, முழு நாட்டையும் பொருளாதார நிச்சயமற்ற சூழலுக்கு இழுக்கிறார்.” எனக் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மூன்று முடிவில்லாத தேர்தல்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் நெதன்யாகுவுடன் சேர பென்னி காண்ட்ஸ் ஒப்புக் கொண்டார். அதன் மூலம் அவசரகால கூட்டணி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் பிரதமர் பதவி இரு கட்சித் தலைவர்களிடையே மாறி மாறி வரும். நெதன்யாகு முதலில் 18 மாதங்கள் பிரதமராக பணியாற்றுவார். பின்னர் பென்னி காண்ட்ஸ் பதவியேற்பார்.

ஆனால் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அதிருப்திகள் அவ்வப்போது எழுந்த நிலையில், தற்போது பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் கவிழ்ந்துள்ளது.

Views: - 1

0

0