அமைதிக்கான நோபல் பரிசு..! இஸ்ரேல் பிரதமர் மற்றும் அபுதாபி இளவரசரின் பெயர்கள் பரிந்துரை..!
25 November 2020, 12:04 pmஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தங்கள் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் பங்களித்ததற்காக இருவரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வேட்புமனுவை அபுதாபி மகுட இளவரசர் முகமது பின் சயீதுடன் நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் இன்று சமர்ப்பித்தார்” என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடக்கு அயர்லாந்தின் முன்னாள் முதல் அமைச்சர் டிரிம்பிள், 1998’ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்காக அவர் இதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் டிரிம்பிள் தான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதால், மற்றவர்களை பரிந்துரைக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
நோபல் பரிசுக் குழு நெதன்யாகு மற்றும் அல் நஹ்யானின் வேட்பு மனுக்களை மதிப்பாய்வு செய்யும்.
செப்டம்பர் 15 அன்று, இஸ்ரேல், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிடையே சமாதான உடன்படிக்கைகளின் அடித்தளத்தை அமைப்பதற்காக வெள்ளை மாளிகையில் கையெழுத்திடும் விழாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்கினார்.
இரண்டு வளைகுடா நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கையெழுத்திட்ட ஆபிரகாம் உடன்படிக்கையின் படி, அவர்கள் இஸ்ரேலுடன் நல்லுறவில் உள்ள எகிப்து மற்றும் ஜோர்டானுடன் இணைந்துள்ளனர்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் பின் ரஷீத் அல் சயானி மற்றும் அபுதாபி இளவரசர் நஹ்யான் ஆகியோர் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், டிரம்ப் மற்ற அரபு முஸ்லீம் நாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொள்கையை பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் 2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே டிரம்புக்கு வேட்புமனுவை சமர்ப்பித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் எல்லை தகராறு போன்ற பிற நீடித்த மோதல்களில் புதிய இயக்கத்தை உருவாக்குவதில் அவரது முக்கிய பங்கிற்காக பரிந்துரைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0
0