மெகபூபா முப்தி வீட்டு சிறையில் இல்லை: காஷ்மீர் போலீசார் விளக்கம்…!!

28 November 2020, 12:08 pm
Mehbooba_Mufti_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகர்: மெகபூபா முப்தி வீட்டு சிறையில் இல்லை என காஷ்மீர் மண்டல போலீசார் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி நடவடிக்கை எடுத்தது. இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 14 மாதங்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது மறுபடியும் தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மெகபூபா தெரிவித்துள்ளார். இதுபற்றி மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நான் மீண்டும் சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக காஷ்மீர் நிர்வாகம் புல்வாமாவில் உள்ள வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினரை சந்திக்க எனக்கு அனுமதி மறுத்து விட்டது.

எனது மகள் இல்திஜா வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார் என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.கடந்த மக்களவை தேர்தலில் மெகபூபா முப்தி, ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவை கோரியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் வாகித் உர் ரகுமான் பர்ரா கைது செய்யப்பட்டார். எனினும் முப்தியின் இந்த குற்றச்சாட்டை காஷ்மீர் மண்டல போலீசார் மறுத்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு புல்வாமாவுக்கு செல்லும் திட்டத்தினை தள்ளி வைக்கும்படி அவரிடம் கேட்டு கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0