2014 பெஷாவர் பள்ளித் தாக்குதல்..! சொந்த மக்களே இப்படி செய்தால் எப்படி..? வெளுத்து வாங்கிய நீதிபதி..!
26 September 2020, 11:22 pm2014 பெஷாவர் பள்ளி படுகொலை, பாகிஸ்தானில் அரசாங்கத்தை நடத்தியவர்களின் நிலையைக் கேள்விக்குள்ளாகியுள்ளதோடு உலகில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும், குறிப்பாக அதன் அண்டை நாடுகள் மீது பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளது .
இப்போது, இந்த சம்பவத்தை விசாரித்த ஒரு நீதி ஆணையம், சில உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் வழங்காவிட்டால் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.
“எங்கள் சொந்த மக்கள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் வழங்காவிட்டால், போராளிகள் ஒருபோதும் அவர்களின் மோசமான திட்டத்தில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் எங்கள் சொந்த இரத்தம் எதிரிகளுடன் உறவு வைத்திருப்பது மிகவும் மோசமானது.” என்று பாகிஸ்தான் செய்தி வெளியீடு தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஒரு அறிக்கையை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கமிஷனின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
“தெஹ்கைல் கிராமத்தின் உள்ளூர் மக்களால் வெளிநாட்டினரின் இயக்கத்தை அடையாளம் காணவோ அல்லது புகாரளிக்கவோ முடியவில்லை. ஒரே கிராமத்தில் ஆறு பயங்கரவாதிகள் உள்ளூர் மக்களின் உதவியுடன் வசித்து வந்தனர்.” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் ஆயுதம் ஏந்திய தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகள் பெஷாவர் இராணுவ பொதுப் பள்ளியில் 2014 டிசம்பர் 16’ஆம் தேதி நுழைந்து 145 பேரைக் கொன்று குவித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஷாவர் உயர்நீதிமன்றம் நீதிபதி முகமது இப்ராஹிம் கான் தலைமையில் ஒற்றை உறுப்பினர் ஆணையத்தை 12 அக்டோபர் 2018 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைத்தது.
3,000 பக்க அறிக்கையில் 101 சாட்சிகள், 31 போலீசார், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகள் உட்பட 132 பேரின் அறிக்கைகள் உள்ளன. சமூகத்தின் ஒரு பகுதியினர் எந்த காரணத்திற்காகவும் எதிரிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வரை உலகில் எந்த புலனாய்வு அமைப்பும் வெற்றிபெற முடியாது என்று அறிக்கை கூறியுள்ளது.