விஜய் மல்லையா திவாலானவர்: வழக்கு தொடர்ந்த இந்திய வங்கிகள்…லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..!!

Author: Aarthi
27 July 2021, 11:51 am
Quick Share

லண்டன்: இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு இது மிகப் பெரிய வெற்றியாகும். இதன் மூலம் வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

லண்டன் உயர்நீதிமன்ற தீர்ப்பினால் மல்லையாவின் சொத்துகளை முடக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாக கூறி நிறுத்தி வைத்தது. இந்த மனு 2018ல் தாக்கல் செய்யப்பட்டதாகும். 65 வயதாகும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தவிர்க்க முடியாத சூழலில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விஜய் மல்லையா இங்கிலாந்து அரசிடம் ரகசியமாக தஞ்சம் கோரியிருந்ததும் சட்டரீதியில் பிரச்சினையாக இருந்தது.

வெளிநாட்டு பிரஜைகளை ஒப்படைப்பது தொடர்பான நடைமுறைகளில் தீர்வு ஏட்டப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் ஒருங் கிணைந்து விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை நடத்தி வருகின்றன.

2013ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியிலிருந்து வழங்கப்பட்ட கடனுக்கு 11.5 சதவீத வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு கூட்டு வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 278

0

0