ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!

24 June 2021, 8:18 pm
Quick Share

ஜமாத்-உத்-தவா தலைவரும் மும்பை தாக்குதல் சூத்திரதாரியுமான ஹபீஸ் சயீத் வீட்டின் வெளிப்புறத்தில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு ஜாகர் டவுணில் உள்ள பிஓஆர் சொசைட்டி அருகே பிரமாண்ட வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டுக்கு வெளியே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் நேற்று வெடித்து சிதறியது. இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 20 பேர் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அறிந்ததும், சம்பவ பகுதிக்கு காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்தக் குண்டுவெடிப்பு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து காவல் ஆய்வாளர் பஞ்சாப் கானி கூறுகையில், “காரில் வெடிப்பொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்தக் காரை காவலர்களால் தடுக்க இயலவில்லை. இது ஒரு பயங்கரவாத செயல்” என்றார். மேலும், “இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, “காயமுற்றவர்களில் காவலர்களும் உள்ளனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேரில் 6 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது” என்றார்.குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 71 வயதான ஹபீஸ் சயீத், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவருகிறார். இவர் மீது பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு உள்ளது.பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள இந்த பயங்கர குண்டு வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 213

0

0