அழிந்து வரும் அரிய தவளை, பல்லி, ஆமைகளை காக்கும் இளைஞர்கள்!

25 January 2021, 4:30 pm
Quick Share

இரண்டு டீன் ஏஜ் சிறுவர்கள், அரிய தவளைகள், பல்லிகள் மற்றும் ஆமைகளை காத்து, அவைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அழிவில் இருந்து காத்து வருகின்றனர். அந்த சாதனை சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உலகில் உள்ள பல விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து அழிந்து கொண்டே வருகின்றன. அரிய விலங்குகள் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் சேர்ந்து கொண்டே வருகின்றன. ஏராளமான விலங்குகள் நம்முடைய பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டன.

இதற்கு மிக முக்கியமான காரணம் மனிதர்களாகிய நாம்தான். விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடங்களை மனிதர்கள் தொடர்ந்து அழித்து கொண்டே தான் வருகிறார்கள். தங்கள் வாழ்ந்தால் மட்டும் போதும் என்று மனித இனம் நினைப்பதால் மட்டுமே இப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த டீன் ஏஜ் இளைஞர்கள் அதற்கு விதிவிலக்கானவர்கள்.

17 வயதான ஹார்வி ட்வீட்ஸ் மற்றும் டாம் வைட்ஹர்ஸ்ட் இருவரும் கொரோனா லாக்டவுனின் போது, தங்களது ஓய்வு நேரத்தை பிரிட்டனின் குளங்கள், ஏரிகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த உலகில் சில விலங்குகள் மிகவும் அரிதானவை; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காணப்படாத விலங்குகள் பலவும் உள்ளன. இந்த இரு இளைஞர்களும், கிட்டத்தட்ட அழிந்து வரும் 120 உயிரினங்களை மீட்டெடுத்துள்ளனர்.

அரிய தவளை, பல்லி, ஆமைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அதனை செஸ்டர் மிருகக்காட்சி சாலையில் விட்டு வருகின்றனர். இதுகுறித்து ஹார்வி கூறுகையில், ‘நாங்கள் மீட்டெடுக்கும் எங்கள் பிள்ளைகளின் சத்தம் கேட்டு இரவில் விழித்தெழ நாங்கள் விரும்புகிறோம். இரவு முழுவதும் கேட்கும் தவளைகளின் சத்தம் எங்களுக்கு இனிமையை அளிக்கிறது. எங்கள் தலைமுறை பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார். இந்த டீன் ஏஜ் இளைஞர்களின் பொறுப்பான முயற்சிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 8

0

0