“எங்களுக்கும் விரைவாக தடுப்பூசி கொடுங்க”..! இந்தியாவிடம் உரிமையோடு கேட்ட நேபாளம்..!

17 January 2021, 9:22 am
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதை நேபாளம் வாழ்த்தியதுடன், தடுப்பூசிகளை விரைவாக நேபாளத்திற்கு வழங்குமாறு கோரியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறாவது கூட்டு ஆணையக் கூட்டம் டெல்லியில் நடந்து வரும் நிலையில், அதில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி ஆகியோர் தலைமை தாங்கினர்.

பிராந்தியத்தில் கொரோனா தொற்றுநோயை எதிர்ப்பதில் இரு தரப்பினருக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை இந்த கூட்டம் குறிப்பிட்டது என்று வெளியுறவு  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதற்கு நேபாளம் இந்தியாவை வாழ்த்தியதுடன், நேபாளத்திற்கு தடுப்பூசிகளை விரைவாக வழங்குமாறு கோரியது” என்று அது கூறியுள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்கு ஆகிய தடுப்பூசிகளை இந்தியா அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கி இன்று தடுப்பூசி போடும் பணியையும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் அனைத்து நாட்டு மக்களுக்கும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு கூறியிருந்தார்.

மேலும் அண்டை நாடுகள் முதல் எனும் கொள்கையின் படி, தடுப்பூசி கிடைத்தவுடன் வெளிநாடுகளுக்கு வழங்கும்போது, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0