நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் -உச்ச நீதிமன்றம் உத்தரவு

12 July 2021, 10:36 pm
Quick Share

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி கடந்த மே மாதம் 22ஆம் தேதி குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். புதிய தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட 30 மனுதாரர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது. இவ்வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று வழங்கிய தீர்ப்பில் தான் ஷெர் பகதூரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் 28 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஆளும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவரான கேபி ஷர்மா ஒலிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நேபாளத்தின் இந்த நிலைமைக்கு காரணம் வரைபடம் என்றழைக்கப்படும் மேப்.சில ஆண்டுகளாகவே இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். மாறாக சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். இந்தியாவுடனான மோதலின் உச்சமாக கடந்தாண்டு இந்திய-நேபாள எல்லையிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் வரைபடத்தை மாற்றாமல் தன் போக்கில் ஒலி செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அதேபோல ராமர், புத்தர் நேபாளத்தில் பிறந்தவர்கள், யோகா இந்தியாவில் தோன்றவில்லை என பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.இந்தியாவுடனான அவரின் அணுகுமுறை அவரது சொந்த கட்சித் தலைவருக்கே பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் ஒலிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவருக்கு எதிராக பல எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசினர். இதனால் பெரும்பான்மையில்லாமல் அவரது ஆட்சி தொடர்ந்தது. விவகாரம் பெரிதானதையடுத்து பதவி விலகுமாறும் கட்சியினர் வலியுறுத்தினர். உடனே கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு ஒலி பரிந்துரைத்தார்.

அதன்படி டிசம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு தடை விதித்தது. ஆனால் மீண்டும் ஒலியின் பரிதுரைப்படி இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தை மே மாதம் கலைத்தார். இதையடுத்து இறுதி விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு மேப் ஒரு நாட்டின் அரசியலே தலைகீழாக திருப்பியிருப்பது வரலாற்று சுவாரசியமாக இருக்கிறது.

Views: - 140

0

0