நாளை முதல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: நேபாள அரசு அறிவிப்பு

23 June 2021, 9:33 pm
Quick Share

காத்மாண்டுவில் இருந்து குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் வழக்கமான சர்வதேச விமானங்களை இயக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் உள்நாட்டு விமானங்கள் மே 3ம் தேதி ரத்து செய்யப்பட்டன. சர்வதேச விமானங்கள் அனைத்தும் மே 6ம்தேதி நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டன. காத்மாண்டு-டெல்லி வழித்தடத்தில் 2 வாராந்திர விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள கலாச்சாரத்துறை, சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளை அனுமதித்து, விமானங்களை இயக்க வேண்டும், சர்வதேச விமானங்கள் இதற்குமுன்னர் வெளியிடப்பட்ட பாதுகாப்பு நெறிமுறையின்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் வழக்கமான சர்வதேச விமானங்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய முடிவுகளின்படி, நேபாள ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் காத்மாண்டு-தோகா வழித்தடத்தில் வாரத்தில் இரண்டு விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும்.

காத்மாண்டு-தோகா, காத்மாண்டு-கோலாலம்பூர், வழித்தடங்களில் வாரத்திற்கு நான்கு விமானங்கள், காத்மாண்டு-இஸ்தான்புல், காத்மாண்டு-தம்மம் மற்றும் காத்மாண்டு-குவைத் வழித்தடங்களில் வாரத்திற்கு இரண்டு விமானங்களை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மற்ற வழித்தடங்களைப் பொருத்தவரை, காத்மாண்டு-மஸ்கட், காத்மாண்டு- சியோல், காத்மாண்டு-ஜப்பான், காத்மாண்டு-செங்டு மற்றும் காத்மாண்டு-குவாங்சோ ஆகிய வழித்தடங்களில் வாரத்திற்கு ஒரு விமானத்தை இயக்க அனுமதித்துள்ளது.

Views: - 187

0

0