அமெரிக்க போலீஸ் அதிகாரியையே உளவாளி ஆக்கிய சீனா.! அதிர்ச்சித் தகவல் அம்பலம்..!

22 September 2020, 5:15 pm
NYPD_Chinese_Spy_Baimadajie_Angwang_UpdateNews360
Quick Share

திபெத் வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதான நியூயார்க் காவல்துறை அதிகாரி ஒருவர் சீனாவின் உளவாளியாக, அமெரிக்காவில் திபெத்திய சுதந்திர இயக்கத்தின் ஆதரவாளர்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க் நகர காவல் துறை அதிகாரியான பைமதாஜி அங்வாங் நேற்று கைது செய்யப்பட்டு, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தில் சீனாவின் சட்டவிரோத உளவாளியாகவும் செயல்பட்டதாகவும், மோசடி செய்ததாகவும், தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அங்வாங் அதிகபட்சமாக 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்புக்கான உதவி அட்டர்னி ஜெனரல் ஜான் டெமர்ஸ் கூறுகையில், சீன அரசாங்கம் அமெரிக்க குடிமகனும் அமெரிக்காவின் மிகப்பெரிய சட்ட அமலாக்கத் துறையின் உறுப்பினருமான அங்க்வாங்கை அதன் உளவுத்துறை சேகரிப்பு மற்றும் வெளிநாடுகளில் சீனர்களை அடக்குவதற்கு நியமித்தது எனக் கூறியுள்ளார்.

நியூயார்க்கின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் சேவை செய்வதற்கும் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பதவியேற்ற உறுதிமொழியை அங்வாங் மீறியதாகவும், அதற்கு பதிலாக நியூயார்க் பகுதியில் சீன குடிமக்களின் நடவடிக்கைகள் குறித்து சீன அரசாங்க அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்ததோடு, அமெரிக்காவில் உள்ள திபெத்திய சமூகத்திற்குள் உளவுத்துறை ஆதாரங்களை உருவாக்கியதாகவும் வக்கீல் சேத் டுச்சார்ம் கூறினார்.

2018’ஆம் ஆண்டு முதல், நியூயார்க்கில் உள்ள துணைத் தூதரகத்தில் பணிபுரிந்த இரண்டு சீன அதிகாரிகளுடன் அங்க்வாங் உறவைப் பேணி வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அங்வாங் சீனாவிலிருந்து ஒரு கலாச்சார பரிமாற்ற விசாவில் அமெரிக்காவிற்கு வந்து, தனது இரண்டாவது விசா விதியை மீறி, இறுதியில் அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். அவர் திபெத்திய இனத்தின் காரணமாக சீனாவில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்ற புகாரின் படி அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப் பட்டது.

2014 முதலே, அங்காங் அங்குள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரிகளின் வழிகாட்டுதலிலும் கட்டுப்பாட்டிலும் செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, நியூயார்க் பகுதியில் உள்ள சீன குடிமக்களின் செயல்பாடுகள் குறித்து அவர் அறிக்கை அளித்தார். நியூயார்க்கிலும் பிற இடங்களிலும் உள்ள திபெத்திய சமூகத்தினுள் சாத்தியமான புலனாய்வு ஆதாரங்களைக் கண்டறிந்து மதிப்பீடு செய்தார்.

இவர் அமெரிக்க இராணுவ ரிசர்வ் படையின் ஒரு அங்கமாகவும் இருப்பதால், ராணுவத் தகவல்களும் சீனாவுக்கு கசிந்திருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.

திபெத் பிராந்தியத்தில் சீனாவின் ஒடுக்குமுறை சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் திபெத்தியர்கள் சுதந்திர திபெத்துக்கான உரிமைகோரலை அதிகரித்து வரும் சமயத்தில், இந்த உளவு நடவடிக்கை குறித்த தகவல் திபெத்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.