140’க்கும் மேற்பட்டவர்களை சட்ட நடவடிக்கைகளிருந்து பாதுகாத்த டிரம்ப்..! தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்..?

20 January 2021, 4:43 pm
Donald_Trump_UpdateNews360
Quick Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னாள் வெள்ளை மாளிகையின் உதவியாளர் ஸ்டீவ் பானனுக்கு தனது பதவியின் இறுதிக் கட்டத்தில் மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆனால் தன்னை அவர் மன்னிக்கவில்லை. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வழக்கறிஞர் ரூடி கியுலியானி ஆகியோருக்கும் மன்னிப்பு வழங்கவில்லை.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பிடன் பதவியேற்கும் நிலையில் இன்று டிரம்ப் பதவி விலகினார். டிரம்ப் தனக்கு தானே மன்னிப்பு வழங்கக் கூடாது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் வாதிட்டனர். இது டிரம்பிற்கு குற்றவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கக் கூடும் என அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

டிரம்பின் 2016 ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய ஆலோசகராக இருந்த பானன், கடந்த ஆண்டு அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவரைக் கட்ட தனியார் நிதி திரட்டும் முயற்சியில் ஜனாதிபதியின் சொந்த ஆதரவாளர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

“பழமைவாத இயக்கத்தில் பானன் ஒரு முக்கியமான தலைவராக இருந்து வருகிறார். மேலும் அவரது அரசியல் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவர்” என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பானனுக்கு மன்னிப்பு வழங்குவதை எதிர்த்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்பிற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். வாக்காளர் மோசடி குறித்த நிரூபிக்கப்படாத கூற்றுக்களுக்கு டிரம்ப் ஆதரவு கோரியதால் இருவருமே சமீபத்தில் தங்கள் உறவை மீண்டும் புதுப்பித்துள்ளனர் என்று நிலைமையை உணர்ந்துள்ள ஒரு அதிகாரி கூறினார்.

140’க்கும் மேற்பட்ட மன்னிப்பு மற்றும் பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு வெளிநாட்டு பரப்புரை சட்டங்களை மீறியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட டிரம்ப்பின் முன்னாள் உயர்மட்ட நிதி திரட்டிய எலியட் பிராய்டிக்கும், ஊழல் குற்றச்சாட்டில் 28 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் டெட்ராய்ட் மேயர் குவாமே கில்பாட்ரிக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.

கூட்டாட்சி ஆயுதக் குற்றங்களில் வழக்குத் தொடரப்பட்ட ராப் பாடகர்களான லில் வெய்ன் மற்றும் கோடக் பிளாக் ஆகியோருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.

2020 ஜனாதிபதித் தேர்தலை முறியடிக்க டிரம்பின் தோல்வியுற்ற முயற்சிகளில் முன்னணியில் இருந்த கியுலியானி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. எனவே அவருக்கு மன்னிப்பு தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் உக்ரேனில் அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணையாளர்கள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் ஆதரவாளர்களால் அமெரிக்க கேபிட்டலில் ஜனவரி 6’ஆம் தேதி வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் டிரம்ப் கடந்த வாரம் ஜனநாயகக் கட்சி தலைமையிலான சபையால் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் ஒரு செனட் விசாரணையை எதிர்கொள்ளக்கூடும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்படலாம்.

ஜனாதிபதியின் மன்னிப்பு என்பது என்ன?

அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து வரும் மன்னிப்பு அதிகாரம் ஒரு ஜனாதிபதிக்கு கிடைக்கக்கூடிய பரந்த அதிகாரங்களில் ஒன்றாகும். இது ஒருவரை வழக்கிலிருந்து பாதுகாக்கும்.

வழக்கை எதிர்கொள்பவர்களுக்கு மன்னிப்பு பொதுவாக வழங்கப்படும் அதே வேளையில், மன்னிப்பு என்பது இதுவரை செய்த தவறுகளுக்கு எதிராக்காலத்தில் வழக்கு தொடுக்க முடியாத வகையில் பாதுக்காக்கும் ஒரு அமசமாகும்.

மன்னிப்பு அரசாங்கத்தின் பிற கிளைகளால் மதிப்பாய்வு செய்யப்படாது. மேலும் மன்னிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒரு காரணத்தைக் கூற வேண்டியதில்லை. ஆனால் மன்னிப்பு சக்தி முழுமையானதல்ல. இது கூட்டாட்சி குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

டிரம்ப் தனது பதவிக் காலத்தில் இருதுவரை 140’க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இதுபோன்ற மன்னிப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Views: - 0

0

0